அமெரிக்க இந்தியருக்கு $500,000 'மாமேதை' உதவித் தொகை!
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் (Massachusetts) உயிரியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணி மற்றும் ஆராய்ச்சி செய்து வரும் Dr.வம்ஷி மூதா இன்று அவரே நம்ப முடியாத அளவு புகழுக்குச் சொந்தக்காரர்! உலகப் பிரசித்தியும் பெற்று விட்டார்.
இந்த திடீர் புகழ் அவரைத் தேடி வருவதற்கு முன் அவர் மனித உடலில் உள்ள மைடோகாண்ட்ரியா (mitochondria) செல்களைப் பற்றிய ஆராய்ச்சியும், வம்சாவழி வகை நோய்களான நீரிழிவு கொலஸ்ட்ரால் உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் செய்ததோடு, மருத்துவக் கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டும் வந்திருக்கிறார். செப்-18-ஆம் தேதி டாக்டருக்கு வந்த தொலைபேசி அழைப்பு (விருது பற்றி!) அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது!
ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும், 'மாமேதை விருது' என்று சொல்லப்படும், MacArthur Fellowship ஆன $500,000 பெறும் Dr.மூதாவிற்கு முன்னர், இந்திய வம்சா வழியினர் ஐந்து பேர் இவ்விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி! அதாவது, எழுத்தாளர்கள் வேத் மேத்தா, ரூத் ப்ரவேர் ஜப்வாலா, கவிஞர் AK ராமானுஜன், சரோத் கலைஞர் உஸ்தாத் அக்பர் அலி கான் மற்றும் பொருளாதார நிபுணர் செந்தில் முல்லைநாதன் ஆகியோர்.
இவ்விருதுக்குரியவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருப்பவர் மற்றும் அவரை பரிந்துரைத்தவர் பற்றிய விவரங்கள் ஒருபோதும் வெளியிடப்படுவதில்லை; பரிசுக்குரியவரை விண்ணப்பங்களை பரிசீலித்தோ, நேர்காணல் மூலமாகவோ தேர்வு செய்யும் வழக்கம் அறவே கிடையாது! பின் எப்படித் தான் ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்? இவ்விருதை பெற ஒருவருக்கு வேண்டியதெல்லாம் ஒரு பிரமிக்கத்தக்க அசலான எண்ணம் மட்டுமே!! அதை ஈடேற்றும் நோக்கில் அப்படைப்பாளியின் செயல்களோ அல்லது அராய்ச்சிப்பணியோ சமூக நலன்/பயன் சார்ந்து அமைந்திருத்தல் அவசியம்.
Dr.மூதா தனது ஆராய்ச்சியில், முதன்முறையாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுண்கணிதம் ஆகியவற்றை பயன்படுத்தி, மைடோகாண்ட்ரியா-வில் உள்ள வம்சாவழி நோய்க்குக் காரணமான ஹெலிகல் சுற்றுக்களை (Helical Twists) கண்டறிவதற்கான ஒரு உத்தியை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார். மேலும், ஒரு வகை மெடபாலிக் (Metabolic) நோய்க்குக் காரணமான மரபணுவும், TYPE-2 நீரிழிவு நோய் பற்றிய பல புதிய தகவல்களும் Dr.மூதாவின் அயராத உழைப்பினால், மருத்துவ உலகிற்குக் கிட்டிய முக்கியக் கண்டுபிடிப்புகளாகும்.
அவரது தந்தையாரான Dr.வெங்கட்ரமண ராவ், பணி நிமித்தம், அமெரிக்க மண்ணுக்கு பயணம் செய்தபோது மூதா அவர்கள் ஆறு மாதக் குழந்தை! பின்னர், மூதாவின் தந்தை, அவர் பெற்ற மக்களின் படிப்பு வாய்ப்பையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, அமெரிக்காவிலேயே தங்கி விட முடிவு செய்து விட்டார். தெலுங்கரான Dr.மூதா நாலைந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆந்திர விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்! இவரும் (பல தென்னிந்தியர்களைப் போல்!) ஒரு இட்லி-சாம்பார் பிரியர்; இன்னும் திருமணமாகாத ஒரு மிகத் தகுதியுடைய 33 வயது இளைஞரும் கூட!!!
1 மறுமொழிகள்:
Gifted person!
Post a Comment